நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்கு ரூ.1 கோடி நிதியுதவி - வழக்கறிஞர் கபில் சிபல் அறிவிப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடி தற்பொழுது வழக்குச் சிக்கலில் தவிக்கும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்காக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். நீட் முறைகேட்டுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 36 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர் வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்குகள் குறித்து டெல்லியில் கபில் சிபலை, அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனக்குப் பின் பேசிய கபில் சிபல், "அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு பழிவாங்குவதை அனுமதிக்க முடியாது" எனக் கூறி, மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நாடு தழுவிய அளவில் எதிர்கொள்ளத் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை வழக்கறிஞர் உதவி நிதியாக அறிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள தாராள மனப்பான்மை கொண்ட வழக்கறிஞர்களும் பொதுமக்களும் மாணவர்களின் சட்ட உதவி நிதிக்கு உதவ வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைக்கவும், இலவச அல்லது குறைந்த கட்டணச் சட்ட உதவிகளை முறைப்படுத்தவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் விரைவில் புதிய வலைத்தளம் தொடங்கப்பட உள்ளது.

மாணவர்கள் மீதான வழக்குகளை அரசு முழுமையாகத் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.
