அடையாறு ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! கொலையா? போலீசார் தீவிர விசாரணை
சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு ஆற்றில் பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே உள்ள மணல் மேட்டில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கர் நகர் போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சுமார் 6 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சடலத்தின் முகம் சிதைந்த நிலையில் இருந்ததுடன், தலை மற்றும் முகம் துணியால் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்த நபர் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
