230 அடி ஆழக் கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன்! உயிரைப் பணயம் வைத்து மீட்ட 11 வயது சிறுவன்
ஆப்கானிஸ்தானில் சுமார் 230 அடி ஆழமுள்ள குறுகிய ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனை, 11 வயது சிறுவன் துணிச்சலுடன் உள்ளே இறங்கி மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்தில், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது ஜைனுல்லா என்ற 5 வயது சிறுவன், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சுமார் 70 மீட்டர் ஆழமுள்ள அந்தக் கிணறு, வெறும் 30 சென்டிமீட்டர் அகலமே கொண்டிருந்தது. இதனால் பெரியவர்கள் உள்ளே இறங்கி சிறுவனை மீட்பது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டது.
கிணற்றுக்குள் சிக்கியிருந்த சிறுவன், அச்சத்தில் இருந்ததால் மேலிருந்து அனுப்பப்பட்ட கயிற்றைத் தனது உடலில் கட்டிக்கொள்ள முடியவில்லை. அவரை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. அப்போது ஹஸ்ரத் உமர் என்ற 11 வயது சிறுவன், கிணற்றுக்குள் இறங்கி உதவ முன்வந்தார்.
இரண்டாவது முயற்சியில் வெற்றி
முதல் முயற்சியில் கிணற்றின் குறுகிய பகுதியில் உடல் சிக்கியதால் உமரை மீண்டும் மேலே தூக்கினர். இருப்பினும், அவர் முயற்சியைக் கைவிடவில்லை. இரண்டாவது முறையாகக் கிணற்றுக்குள் இறங்கிய அவர், அடிப்பகுதியில் சிக்கியிருந்த ஜைனுல்லாவை அடைந்தார்.
பின்னர் மீட்புக் குழுவினர் கயிறுகளின் உதவியுடன் இருவரையும் கவனமாக மேலே கொண்டு வந்தனர். அங்கு திரண்டிருந்த மக்கள் சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதைக் கண்டு நிம்மதியடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் வறட்சி காரணமாகத் தண்ணீரைத் தேடி ஆழமான கிணறுகள் தோண்டப்படுகின்றன. அவற்றில் சில பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் பாதுகாப்பாக மூடப்படாமல் இருப்பதால், குழந்தைகள் தவறி விழும் அபாயம் ஏற்படுகிறது. இந்தச் சம்பவம், பயன்பாட்டில் இல்லாத கிணறுகளைப் பாதுகாப்பாக மூட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
