13 நாட்கள் தொடர் தாக்குதலுக்கு பின் அமெரிக்கா இடைவேளை!

 
அமெரிக்கா ஈரான்

இடைக்காலப் போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 13 நாட்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், கடந்த இரவில் புதிய தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில் அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின.

ஈரானின் வடபகுதியில் உள்ள புரட்சிகரக் காவல் படைக்குச் சொந்தமான கடற்படைத் தளம், கேஷம் தீவு மற்றும் அணுஆயுதத் தளங்கள் அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா சரமாரித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் குசேஸ்தான் மற்றும் பார்ஸ் ஆகிய மாகாணங்களிலும் அமெரிக்கப் படைகளின் வான்வழித் தாக்குதல்களால் தொடர் வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன. கடந்த 13 இரவுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த வான்வழித் தாக்குதல்களுக்கு இடையே, முதல்முறையாகத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈராக் அமெரிக்கா போர்

கடந்த இரவில் அமெரிக்கா தரப்பிலிருந்து எந்தவிதப் புதிய தாக்குதல்களும் முன்னெடுக்கப்படவில்லை. ஈரானில் கடந்த இரவு எந்தவிதப் அசம்பாவிதமும் இன்றி அமைதியாகக் கழிந்தது என்று ஈரானிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹோசைன் கெர்மான்போர் உறுதிப்படுத்தியுள்ளார். இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்த முறிவுக்குப் பிறகு தொடர்ந்து 13 நாட்களாகத் தீவிரமடைந்து வந்த இருதரப்பு மோதலில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகத் தாக்குதல் நிறுத்தம் பிராந்தியத்தில் சற்றே அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.