158 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூத்த அரிய மலர்... தாவரவியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் சுமார் 158 ஆண்டுகளுக்குப் பிறகு 'சயானந்தஸ் ஹூக்கேரி' என்ற மிக அரிய வகை மலர் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மலர் மீண்டும் கண்டறியப்பட்டிருப்பது, இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த மலர் முதன்முதலில் கடந்த 1867-ஆம் ஆண்டில் தாவரவியல் வல்லுநர்களால் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 158 ஆண்டுகள் வரை இது குறித்த எந்தவொரு பதிவுகளும் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கவில்லை. காம்பானுலேசி எனும் அரிய வகை தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த மலர். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் சுமார் 3,600 மீட்டர் (சுமார் 11,800 அடி) உயரத்தில் அமைந்த பனிச்சிகரப் பகுதிகளில் இந்த மலர் பூத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் மிகவும் அரிதாக மட்டுமே காணப்படும் இந்த தாவரத்தின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், இதைப் பாதுகாக்கப்பட்ட பட்டியலின் கீழ் கொண்டு வர ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த மலரை 'அருகிவரும் இனம்' என வகைப்படுத்த இந்திய தாவரவியல் ஆய்வு மையம் பரிந்துரை செய்துள்ளது.
