சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக நடந்த 'பேய்த் திருமணம்'!

 
திருமணம் சடங்கு விநோத பழக்கம் பழங்குடி

கர்நாடக மாநிலத்தில் துளுநாட்டின் ஆன்மிகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு விசித்திரமான திருமண நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே உள்ள முண்டூர் கிராமத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் மற்றும் சரோஜா ஆகிய இருவர் தங்களின் சிறுவயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர். சிறுவயதிலேயே தங்களது ஆசைகள் மற்றும் எதிர்காலக் கனவுகள் அனைத்தையும் இழந்து உயிரிழந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும், அவர்களது குடும்பத்தினர் தற்போதைய காலகட்டத்தில் சந்தித்து வரும் பல்வேறு தடைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும் துளுநாட்டின் பாரம்பரிய சடங்கான 'பேய்த் திருமணம்' விமரிசையாக நடத்தப்பட்டது.

5வது திருமணம்

தற்போது உயிருடன் இருப்பவர்களுக்குத் திருமணம் எப்படி நடைபெறுமோ, அதேபோன்று அனைத்து நடைமுறைகளும் இந்த நிகழ்விலும் பின்பற்றப்பட்டன. உயிரிழந்த மணமகன் மற்றும் மணமகளைப் பிரதிபலிக்கும் வகையில் களிமண் மற்றும் வாழைப்பழங்களைக் கொண்டு அழகிய உருவச் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.

பின்னர் அந்தச் சிலைகளுக்குப் புத்தாடைகள் மற்றும் ஆபரண நகைகள் அணிவிக்கப்பட்டன. உறவினர்கள் முன்னிலையில் முறைப்படி மாலை மாற்றப்பட்டு, மாங்கல்யம் சூட்டுதல் உள்ளிட்ட அனைத்து திருமணச் சடங்குகளும் வைதீக முறைப்படி அரங்கேறின. திருமணச் சடங்குகள் அனைத்தும் சுபமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வந்திருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் தடபுடலாகத் திருமண விருந்தும் அளிக்கப்பட்டது.

திருமணம் கல்யாணம்

துளுநாட்டின் மிக ஆழமான ஆன்மிகப் பாரம்பரியத்தையும், மூதாதையர் வழிபாட்டையும் உலகிற்குப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அரிதான பேய்த் திருமண நிகழ்வு, தற்பொழுது சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.