31 ஆண்டு கால விசுவாசம் - தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்... பிரேமலதாவுக்கு கடிதம்!

 
மீசை ராஜேந்திரன் மீசை ராஜேந்திரன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக-வின் மிக முக்கியமான முகங்களில் ஒருவரான மீசை ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர், தற்போது தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகத் தேமுதிக-வின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மீசை ராஜேந்திரன், இம்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரியிருந்தார். கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளும், கட்சி தொடங்கிய பிறகு 21 ஆண்டுகளும் விசுவாசமாகப் பணியாற்றியவர்.

மீசை ராஜேந்திரன்

ஏற்கனவே மூன்று முறை தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இவருக்கு நீண்ட நாட்களாக இருந்த நிலையில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாகப் பிரேமலதாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

விஜயகாந்தின் 'வலது கரம்' என்று தொண்டர்களால் அழைக்கப்பட்ட மீசை ராஜேந்திரன் விலகல், தேர்தலில் தேமுதிக-விற்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. "கேப்டனின் உண்மையான விசுவாசி விலகிவிட்டார்" எனச் சமூக வலைதளங்களில் தொண்டர்கள் தங்களது கவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மீசை ராஜேந்திரன்

மீசை ராஜேந்திரன் அடுத்ததாக எந்தக் கட்சியில் இணையப் போகிறார் அல்லது சுயேச்சையாகப் போட்டியிடுவாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் வேறு ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.

தேர்தல் நேரத்தில் தேமுதிக-வின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறுவது அக்கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் இழந்த செல்வாக்கை மீட்கப் போராடி வரும் நிலையில், மீசை ராஜேந்திரனின் இந்த முடிவு கட்சித் தலைமைக்குப் புதிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது.