59 வருஷங்கழித்து தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்... ராஜீவ் காந்தி நினைவு நாளில் வரலாற்றுத் தருணம் - மாணிக்கம் தாகூர் எம்பி நெகிழ்ச்சி!

 
மாணிக்கம் தாகூர் மாணிக்கம் தாகூர்

தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் இடம் பிடித்துள்ளதாகவும், இந்த வரலாற்றுத் தருணம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அமைந்திருப்பது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய உணர்வுபூர்வமான அங்கீகாரம் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கடந்த 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெறவில்லை. சுமார் 59 ஆண்டுகள் ஆட்சியில் பங்கு பெறக் காங்கிரஸ் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நீண்ட காலக் கட்டத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் கட்சி பலமுறை முக்கியப் பங்கு வகித்து, கூட்டணி தர்மத்துடன் துணை நின்றது.

குறிப்பாக, கடந்த 2006ஆம் ஆண்டு அமைந்த திமுக அரசு, காங்கிரஸின் 38 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடுதான் செயல்பட்டது. 2009ல் இடதுசாரிகளும், பாமகவும் கூட்டணியை விட்டு வெளியேறிய போதும், காங்கிரஸ் உறுதியாக நின்று அன்றைய அரசை நிலைநிறுத்தியது. ஆனால், இத்தனை ஆதரவு கொடுத்தும் காங்கிரஸுக்கு ஆட்சியில் உண்மையான பங்கு வழங்கப்படவில்லை.

மாணிக்கம் தாகூர் மேலூர்

கடந்த 2025 டிசம்பரில், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் "கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு" என்ற புதிய அரசியல் திசையை முன்வைத்தார். ஆனால், அப்போதைய திமுக தலைமை இதனை நிராகரித்து, "தமிழகம் கூட்டணி அரசியலை ஏற்காது" என்று வாதிட்டது.

ஆனால், தமிழக மக்கள் அதற்கு வேறொரு பதிலை வழங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மட்டுமே அன்று வெளிப்படையாகக் "கூட்டணி ஆட்சி மற்றும் கூட்டணிக்கு மரியாதை" குறித்துப் பேசினார். மக்கள் பழைய ஒற்றைக் கட்சி ஆதிக்க அரசியலை நிராகரித்து, விஜய் தலைமையிலான கூட்டணி அரசுக்குத் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று, 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல; அது ஒரு உணர்வுபூர்வமான வரலாற்றுத் தருணம்.

மாணிக்கம் தாகூர்

தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கிறார்கள். இவர்கள் தமிழக மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் முழுமையாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இன்று, பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் தொண்டர்கள் அனுபவித்த தியாகம், விசுவாசம் மற்றும் பொறுமைக்கு ஒரு நல்ல பதில் கிடைத்திருக்கிறது. இது இந்திய காங்கிரஸிற்கே ஒரு புதிய அரசியல் மாதிரி. கூட்டணிக்கு உரிய மரியாதை கொடுத்த முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என மாணிக்கம் தாகூர் எம்பி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.