7 வருட காத்திருப்புக்குப் பின், காதலித்தப் பெண்ணைக் கரம் பிடிக்கிறார் 'குரங்கு மனிதன்' ஜோதிராஜ்!
செங்குத்தான பாறைகளில் பாதுகாப்பு உபகரணங்களின்றி ஏறும் திறமையால் 'குரங்கு மனிதன்' மற்றும் 'குரங்கு ராஜ்' என அழைக்கப்படும் ஜோதிராஜுக்கும், நிவேதிதாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிராஜ், சிறுவயதில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தற்போது கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் வசித்து வருகிறார். குரங்குகளின் அசைவுகளைக் கவனித்து மலையேறும் கலையைக் கற்ற இவர், நீர்வீழ்ச்சிகளில் தவறி விழுபவர்களை மீட்கும் துணிச்சலான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டபோது நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு சில நாட்களில் அவர் மீண்டபோதிலும், சில காரணங்களால் அப்போது நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்றுபோனது.
தற்போது, முன்னதாகத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் உறவினரான நிவேதிதாவுடன் ஜோதிராஜிற்குத் திருமணம் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்காவில் உள்ள வைபவ் கார்டனில் வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

இந்தத் திருமணத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் நிதி உதவி கோரிய ஜோதிராஜிற்கு, வெளிநாட்டு கலைஞர் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் உதவ முன்வந்துள்ளனர். மேலும் திருமண மண்டபமும் வாடகைச் சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
