இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 50-ஐ கடந்த சிறுத்தைகள் எண்ணிக்கை - 5 குட்டிகளுடன் சாதனை படைத்த ஜவாலா
இந்திய வனப்பகுதியில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தை இனம், 'ப்ராஜெக்ட் சீட்டா' திட்டத்தின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. குன்னோ தேசியப் பூங்காவில் இன்று 5 சிறுத்தை குட்டிகள் பிறந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் மொத்த சிறுத்தை எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குன்னோ தேசியப் பூங்காவில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 'ஜவாலா' என்ற சிறுத்தை இன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தியாவில் 1952-ல் சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் எண்ணிக்கை 50-ஐக் கடந்துள்ளது பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்திய மண்ணில் பிறந்த சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இது சிறுத்தைகள் இந்தியச் சூழலுக்கு முழுமையாகத் தகவமைத்துக் கொண்டதைக் காட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பகிர்ந்துள்ளார். வன ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று என அவர் பாராட்டியுள்ளார்.

சிறுத்தைகள் எண்ணிக்கை 50-ஐக் கடந்தாலும், இந்தியாவில் ஏற்கனவே உள்ள புலிகள் மற்றும் இந்திய சிறுத்தைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது: 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. தற்போது 6-வது கட்டப் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024-ல் வெளியான அறிக்கையின்படி, இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 8% அதிகரித்து 13,874 ஆக உள்ளது.
