அனைத்து தேர்தல்களிலும் தவெக வெல்லும் - தவெகவில் இணைந்த பின் சி. விஜயபாஸ்கர் பேச்சு!

 
சி. விஜயபாஸ்கர்

"தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் அன்பைப் பெற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முதல் அனைத்துத் தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்றுத் தொடர்ந்து வெல்லும்" என்று அதிமுகவின் முக்கிய முகமும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் முதல் 'மாற்றுக் கட்சியினர் இணையும் மெகா விழா' பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெய்சீலன், வி. புகழேந்தி ஆகியோரைத் தொடர்ந்து, அதிமுகவின் மிக முக்கியத் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துத் தவெக-வில் இணைந்துள்ளார்.

இந்த இணைப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சி. விஜயபாஸ்கர், "சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் மிக விரிவாகவும், ஆரோக்கியமாகவும் நீடித்தது."

"இந்த நீண்ட சந்திப்பின் போது, முதலமைச்சர் விஜய் எங்களை மிகவும் அன்புடன் வரவேற்று, நலம் விசாரித்துத் தவெக-வின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து மிக விரிவாகக் கலந்துரையாடினார்."

அதிமுகவின் வாக்கு வங்கி தவெக பக்கம் முழுமையாக நகர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி அவர் பேசுகையில், "முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி சாமானிய மக்களின் அன்பை முழுமையாக வென்றுள்ளார். அவரது இந்த மக்கள் செல்வாக்கின் காரணமாக, தமிழ்நாட்டில் வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகமே முழுமையாக வென்று சாதனை படைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்.