ஊட்டி, கொடைக்கானலைத் தொடர்ந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வர தடை - அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

 
ஏற்காடு

சேலம் மாவட்டம் மற்றும் ஏற்காடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் மிகக் கனமழை காரணமாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தருவதைத் தவிர்க்க வேண்டும் எனச் சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்குச் செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அடிவாரத்தில் தீவிரக் கண்காணிப்பு:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாநகர், வாழப்பாடி, ஆத்தூர் மற்றும் ஏற்காடு மலைப் பாதைகளில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் ஏற்காட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மலை அடிவாரத்திலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

ஏற்காடு

உள்ளூர் வாசிகள் மற்றும் அவசியத் தேவைகளுக்காகச் செல்பவர்கள் மட்டுமே தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். மலைப்பாதையில் பயணிக்கும் உள்ளூர் மக்கள், மழை நேரங்களில் வாகனங்களை மிகவும் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்று, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாகக் குற்றாலம் மற்றும் கும்பக்கரை அருவிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரெட் அலர்ட் கொடைக்கானல் நீலகிரி கனமழை

தென்காசியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்குக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிப் பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை 4-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்குப் பொதுமக்கள் செல்வதைத் தவிர்த்து, மாவட்ட நிர்வாகங்களின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.