தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் அதிர்ச்சி... நாளை முதல் அமலுக்கு வருகிறது... லாரி வாடகை 15% உயர்வு!

 
லாரி லாரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு கூட்டம் நேற்று  நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான முகவர்கள் கலந்துகொண்டு தங்களது தற்போதைய வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் மினி லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் பேசுகையில், "புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக மினி லாரிகளுக்கான வாடகைக் கட்டணம் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே நிலையாகவே நீடித்து வருகிறது. ஆனால், தற்போது இந்தியாவில் டீசல் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருவதால், லாரிகளை இயக்க முடியாமல் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்பட்டுப் படுபாதாளத்திற்குச் சென்றுள்ளது" என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், அண்டை மாநிலமான தமிழகத்தை விட புதுச்சேரியில் டீசல் விலை சற்றே குறைவாகக் கிடைத்த போதிலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு, இன்சூரன்ஸ் தொகை உயர்வு மற்றும் லாரிகளுக்கான டயர்கள் உள்ளிட்ட உதிரிப் பாகங்களின் விலை பன்மடங்கு எகிறிவிட்டது லாரி தொழிலை முற்றிலும் நலிவடையச் செய்துள்ளது.

இதனால் ஏற்படும் தொடர் நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி சங்கத்தின் சார்பில் மினி லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 15 சதவீதம் வரை உயர்த்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திடீர் 15 சதவீத வாடகைக் கட்டண உயர்வானது நாளை ஜூன் 15ம் தேதி முதல் புதுச்சேரி முழுவதும் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருகிறது என்று சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் லாரி வாடகை 25% உயர்த்தப்பட உள்ள நிலையில், தற்போது புதுச்சேரியிலும் 15% வாடகை உயர்த்தப்பட்டிருப்பது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி வியாபாரிகளிடையே கூடுதல் கவலையையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.