அகிலேஷ் யாதவுக்கு டீ கொடுத்ததால் பரபரப்பு... தேநீர் கடைக்கு அதிகாரிகள் மிரட்டல் !

 
அகிலேஷ் யாதவ் அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தேநீர் கடை, தற்போது அரசியல் மோதல்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தப் பகுதி வழியாகச் சென்றபோது, அந்தச் சாதாரணக் கடையில் தேநீர் அருந்தி உரிமையாளருடன் உரையாடினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அன்று முதல் அந்தக் கடைக்கு அதிகாரிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளதாக உரிமையாளர் சேஷ்மணி யாதவ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி

அகிலேஷ் யாதவ் வந்து சென்ற சில நாட்களிலேயே, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்தக் கடையைச் சோதனையிட வந்துள்ளனர். தேநீர் தயாரிக்க அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதாகவும், இது உடல்நலத்திற்குத் தீங்கானது என்றும் கூறி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, அகிலேஷ் யாதவுக்கு டீ கொடுத்ததால் கடையை சீல் வைக்கப் போவதாக அதிகாரிகள் மிரட்டியதாகவும், தனது குடும்பத்தினரை மர்ம நபர்கள் தாக்கியதாகவும் உரிமையாளர் சேஷ்மணியின் மகன் ஆர்யன் யாதவ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

தொடர்ந்து வரும் அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலால் மனவேதனை அடைந்த கடை உரிமையாளர், தனது வாழ்வாதாரமான கடையை நிரந்தரமாக மூடப் போவதாக அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்குப் பித்தளைப் பாத்திரங்களைப் பரிசாக வழங்கினார். ஒரு ஏழை வியாபாரிக்கு அரசியல் காரணங்களுக்காகத் தொந்தரவு கொடுப்பதா என அவர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.