நிறைவடைந்தது அக்னி நட்சத்திரம்... ஆனாலும் வெயிலின் தாக்கம் நீடிக்கும்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

 
வெயில் வெப்பம் அக்னி வெயில் வெப்பம் அக்னி

தமிழகத்தில் கடந்த 24 நாட்களாக நீடித்து வந்த அக்னி நட்சத்திரக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தாலும் வெப்பத்தின் தாக்கம் உடனடியாகக் குறையாது என்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த ஆண்டு கோடைக் காலத்தின் தகிப்பு வழக்கத்தை விட அதிகமாகவே இருந்த நிலையில், சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு மற்றும் கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் (43°C) வரை பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது.

வெயில் வெப்பம் அக்னி

மே மாத தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த உள்கட்ட வெயில் காலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் கடுமையான அனல் காற்றையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று இக்காலம் நிறைவுக்கு வந்துள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிந்தாலும், வளிமண்டலச் சூழல் மற்றும் நிலப்பரப்பின் வெப்பத் தரைக்காற்று காரணமாக வெயிலின் தாக்கம் தற்காலிகமாக நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்னும் சில நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்.

வெயில்

தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதால், ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தான் வெப்பத்தின் வீரியம் படிப்படியாகக் குறைந்து, குளிர்ந்த வானிலை நிலவ வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

வெப்பநிலை இன்னும் சில நாட்களுக்குத் தீவிரமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் மதிய நேரங்களில் பிற்பகல் 3:30 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்கப் போதிய அளவு தண்ணீர், இளநீர் மற்றும் மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுமாறும் சுகாதாரத்துறை மற்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.