நாளை முதல் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் - 11 மாவட்ட இளைஞர்களுக்கு உடற்தகுதித் தேர்வு!

 
அக்னிவீர் ராணுவ  உடற்தகுதி

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி மாநிலம் உட்படத் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கின்றனர். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 17½ வயது முதல் 21 வயது வரையுள்ள தகுதியான இளைஞர்கள் இதற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.

அக்னிவீர்

ஆன்லைன் வழியில் விண்ணப்பித்தவர்களில் நாள்தோறும் சுமார் 1,000 நபர்கள் வீதம் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, உடலளவீட்டுத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

முகாமையொட்டி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தைச் சீரமைத்தல், பந்தல் அமைத்தல், நீளம் மற்றும் உயரம் தாண்டுவதற்கான தடங்களைத் தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை ராணுவத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.