'அக்னிவீர்' உடல்தகுதித் தேர்வில் துயரம்... ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய ராணுவத்திற்கான 'அக்னிவீர்' உடல்தகுதித் தேர்வில் பங்கேற்ற கல்லூரி மாணவர் ஒருவர், ஓட்டப்பந்தயத்தின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் 'அக்னிவீர்' திட்டத்தின்கீழ் ஆள்சேர்ப்புக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் கோகுல் (18). இவர் அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வந்தார். தகுதித் தேர்வில் 1.6 கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தபோது, கோகுல் எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார்.
மைதானத்தில் இருந்த ராணுவத்தினரும் காவல்துறையினரும் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஒதியஞ்சாலைக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
