அதிர்ச்சி... மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்த திருமணமான இளைஞர்!

 
ஹனி

 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, திருமணமான இளைஞர் ஒருவர் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆக்ராவின் மல்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் சின்சின்வார் (25). திருமணமாகி குழந்தை உள்ள இவர், சையான் டோல் பிளாசாவில் பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஹனீ என்ற இளம்பெண் ஆக்ராவில் தங்கி பி.எஸ்.சி. படித்து வருகிறார். இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று ஹனீ தனது தோழியுடன் ஆக்ராவின் ரோஹ்தா பகுதியில் உள்ள சஃபையர் காலனி அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு அருணும் வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அருண் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஹனீயை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் ஹனீயின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, அங்கு பொதுமக்கள் திரண்டதால் அருண் தப்ப முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதே துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், ஹனீ ஏற்கனவே அருணுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2025-ம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண் வற்புறுத்தியதாகவும், மறுத்தால் துப்பாக்கியால் சுடுவதாக மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் அவர் முந்தைய குற்றச்சாட்டுகளை மறுத்ததால் அந்த வழக்கு முடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருவருக்கும் இடையிலான பழக்கம், சமீபத்திய தகராறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.