விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு - ஒப்பந்தம் கையெழுத்தானது!

 
விசிக திருமா விசிக திருமா

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இந்தத் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மொத்தம் 8 தொகுதிகளில் பொதுத் தொகுதிகள்: 2, தனித் தொகுதிகள்: 6 ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற விசிக, இந்த முறை கூடுதல் தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த முறையை விட 2 தொகுதிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்:

காங்கிரஸ் 28, விடுதலைச் சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொமதேக 2. நாளை தேமுதிக உடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.