பெங்களூரில் அதிர்ச்சி... இயக்குநரை கடத்தி நகை பறிப்பு... நடிகை உட்பட 11 பேர் கைது!

 
இயக்குநர் கடத்தல்

பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஒருவரை மர்மமான முறையில் கடத்தி, தாக்கிய வழக்கில் கன்னட நடிகை உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அனிஷ் (35) என்ற இயக்குநர், கன்னடத்தில் 'ஜீவனத பாஷே' என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக அவர் ஆஷீர்வாத் என்ற நடிகரிடம் சுமார் ரூ.6 லட்சம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தாதது மற்றும் படத்தின் படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்தியது போன்ற காரணங்களால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

கடத்தல்

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி, தனது காரை விற்பனை செய்ய உதவுமாறு நடிகை ஐஸ்வர்யாவை அனிஷ் அணுகியுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா, காரை வாங்க ஆள் இருப்பதாகக் கூறி பிப்ரவரி 22ம் தேதி அனிஷை பெங்களூருவுக்கு வரவழைத்துள்ளார்.  பெங்களூரு இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அனிஷ் சென்றபோது, அங்கு மறைந்திருந்த ஆஷீர்வாத் மற்றும் அவரது நண்பர்கள் அனிஷை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

அவரிடமிருந்து 22 கிராம் தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தைப் பறித்துக்கொண்ட கும்பல், அவரை நகருக்கு வெளியே கொண்டு சென்றும் தாக்கியுள்ளது.  காயமடைந்த அனிஷை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆடுகோடி போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஆஷீர்வாத் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் கன்னடத் திரையுலகில் நுழைய முயன்று வரும் புதுமுகங்கள் என்பது தெரிய வந்துள்ளது.