அட.. லிஸ்ட்ல ஓபிஎஸ் பேரு..” ஸ்டாலினின் 'புதிய டீம்' தயார் - செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி?!
தமிழகத்தில் மீண்டும் 'திராவிட மாடல்' ஆட்சி அமையும் என எக்ஸிட் போல் கணிப்புகள் உற்சாகமளித்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அமைச்சரவையை முற்றிலும் புதிய பொலிவுடன் மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார்.
சபாநாயகர் பதவி: மூத்த அரசியல்வாதியான ஓபிஎஸ்-ஸின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவருக்குத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது நடந்தால், திராவிட அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக இது அமையும்.

கோவை தெற்கு தொகுதியில் கடும் போட்டியைச் சந்தித்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே அவர் வகித்த மின்சாரம் அல்லது மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மீண்டும் வழங்கப்படலாம் அல்லது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறை ஒதுக்கப்படலாம்.
அனுபவம் மற்றும் இளமைத் துடிப்பு ஆகியவற்றை இணைக்கும் வகையில், சில மூத்த தலைவர்கள் மற்றும் புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வைத்திலிங்கத்திற்கு (ஒரத்தநாடு தொகுதி) டெல்டா மாவட்டப் பிரதிநிதித்துவமாக அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட பழனியப்பனுக்குப் பள்ளிக்கல்வி அல்லது உயர்கல்வித் துறை வழங்கப்பட வாய்ப்புள்ளது. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட துரை சந்திரசேகரனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படலாம். தென் மாவட்டப் பலத்தை அதிகரிக்க நெல்லை சுப்பிரமணியனுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கலாம்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சராக நீடிப்பார் என்றும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூடுதல் அதிகாரங்களுடன் அமைச்சரவையில் வலம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
