அடச்சீ... அத்துமீறிய போலீஸ்காரர்... போதையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்!

 
போதை போலீசார் பாலியல் போதை போலீசார் பாலியல்

சென்னையில் இளம்பெண் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் சூர்யா என்பவர், நேற்றிரவு போதையில், அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். அதிர்ச்சியில் காவலரை கீழே தள்ளிவிட்டு, போதையில் இருந்த காவலரைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் வைத்து, வெளிப்பக்கமாக கதவைத் தாள் போட்டு விட்டு அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சூர்யா

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் விரிவான விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் காவலர் சூர்யா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

ஒரு காவலரே இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபட்டது காவல்துறையின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கருதி, அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, அவர் மீது குற்றவியல் ரீதியாகவும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலியல்

காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய நிலையில், அவர்களே இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது சமூகத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. சமீபகாலமாகத் தமிழகத்தில் காவலர்கள் மீதான இத்தகைய புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் '181' மகளிர் உதவி எண் மற்றும் 'காவலன்' செயலியைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.