அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஏ.ஐ., காலநிலை அறிவியல் பாடம் - முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் (Climate Science) ஆகிய நவீனப் பாடங்களைக் கொண்டு வருவது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் கடந்த ஒரு வார காலமாகத் தினமும் ஒவ்வொரு அரசுத் துறையாக நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் சித்திக், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் பங்கேற்றனர்:

இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ளும் விதமாகக் காலநிலை அறிவியல் ஆகிய பாடங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்கள் மட்டுமின்றி, அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்படக் கற்றுக்கொள்ள ஏதுவாக 'செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வித் திறன் மேம்பாட்டுத் திட்டம்' குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளையும் நவீன 'ஸ்மார்ட் கிளாஸ்' அறைகளாக முழுமையாக மாற்றுவது குறித்து விரிவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் தரத்தை மேம்படுத்தும் விதமாக, சிறந்த முறையில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி சர்வதேச அளவிலான பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில், தற்பொழுது தமிழகத்தில் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற மற்றும் எழுதாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களின் தற்போதைய நிலவரப் புள்ளிவிபரங்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இவற்றுடன், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் இதர பணியிடங்களை விரைந்து நிரப்புவது குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும், வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாகப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்னென்ன புதிய அறிவிப்புகளை இடம்பெறச் செய்யலாம் என்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.