AI டீப்ஃபேக் வீடியோ... அமித் ஷாவிடம் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண் மனு!
ஹைதராபாத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோர், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியுடன் இணைந்து, ஹைதராபாத்தில் அமித் ஷாவைச் சந்தித்த சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் அவருக்குப் பொன்னாடை போர்த்தி, சிலை மற்றும் மலர்க்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினர்.
பிரபலங்களின் ஒப்புதலும் அனுமதியும் இன்றி அவர்களின் உருவம், குரல் மற்றும் முகபாவனைகளைப் பயன்படுத்திப் போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுச் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இது தனிப்பட்ட கௌரவத்திற்கும், குறிப்பாகப் பெண் கலைஞர்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
திரைத்துறையினரின் இந்த நியாயமான கோரிக்கையைக் கேட்டறிந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, AI டீப்ஃபேக் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மத்திய அரசு விரைவில் ஆய்வு செய்து பலமான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார்.
இது குறித்துத் தேவையான விரிவான கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவைச் சமர்ப்பிக்குமாறும், இந்த விவகாரத்தைக் கண்காணிக்க அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் ஒருங்கிணைப்புப் பணிகளை ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
