AI வந்த பிறகு மாறிய வேலைவாய்ப்பு சந்தை! 80% Employability-யுடன் முதலிடத்தில் எந்தப் படிப்பு?

 
ஏஐ

 

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கமாக, வேலைவாய்ப்புத்திறன் அதிகம் உள்ள படிப்புகளில் கணினி அறிவியல் துறை முதலிடத்தை பிடித்துள்ளது.

உயர்கல்வி படிப்பை தேர்வு செய்யும்போது, அந்தப் படிப்பை முடித்த பிறகு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு எவ்வளவு உள்ளது என்பதையும் மாணவர்களும் பெற்றோர்களும் முக்கியமாக கவனிக்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக வெளியாகியுள்ள India Skills Report 2026 பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கியுள்ளது.அதன்படி, கணினி அறிவியல் படித்தவர்களில் 100 பேரில் சுமார் 80 பேர் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கு தயாராக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் 80 சதவீத வேலைவாய்ப்புத்திறனுடன் Computer Science முதலிடத்தில் உள்ளது.

கணினி அறிவியலுக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பம் (IT) துறை 78 சதவீத வேலைவாய்ப்புத்திறனுடன் இடம்பெற்றுள்ளது. மேலாண்மை, பொறியியல் உள்ளிட்ட துறைகளும் வேலைவாய்ப்புக்கான முக்கிய படிப்புகளாக தொடர்ந்து உள்ளன.குறிப்பாக AI, Machine Learning, Data Analytics, Generative AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தொழில்நுட்ப அறிவுடன் நடைமுறை திறன்களையும் பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த graduate employability 56.35 சதவீதமாக உயர்ந்துள்ளதாக India Skills Report 2026 தெரிவிக்கிறது. முந்தைய ஆண்டில் இது 54.81 சதவீதமாக இருந்தது.அதே நேரத்தில், வெறும் பட்டப்படிப்பு மட்டும் வேலைவாய்ப்புக்கு போதுமானதாக இருக்காது என்பதும் இந்த மாற்றமான வேலைச்சந்தையில் முக்கியமான விஷயமாக உள்ளது. AI மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் திறன், Data Analytics, தொடர்புத்திறன், Critical Thinking உள்ளிட்ட திறன்களும் மாணவர்களுக்கு முக்கியமாகின்றன.

AI சார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசும் பல்வேறு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. AI, Machine Learning, Data Analytics உள்ளிட்ட துறைகளில் புதிய பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதனால், எதிர்காலத்தில் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் பட்டப்படிப்புடன் தொழில்துறைக்கு தேவையான நடைமுறை திறன்களையும் வளர்த்துக்கொள்வது வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.