"அதிமுக தொண்டர்கள் எச்சரிகையா இருங்க” - ஆர்.பி.உதயகுமார்!
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் புதிய அரசியல் களம் உருவாகியுள்ள சூழலில், தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தையும் (த.வெ.க) அதன் தலைவர் முதலமைச்சர் விஜய்யையும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், "நடந்து முடிந்த தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய் பெற்ற 35 விழுக்காடு வாக்குகள் என்பது முற்றிலும் சினிமா கவர்ச்சியால் தற்காலிகமாக வந்த ஒன்றுதான். இது எப்போதுமே நிரந்தரமானது அல்ல. 35 சதவீதம் பேர் அவருக்கு வாக்களித்திருந்தாலும், தமிழ்நாட்டின் மீதமுள்ள 65 சதவீத மக்கள் அவரை எதிர்த்துதான் வாக்களித்துள்ளனர் என்பதை விஜய் மறந்துவிடக் கூடாது" என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து தற்போதைய த.வெ.க அரசின் குறைகளைச் சாடிய அவர், "ஆட்சிப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே விஜய் அரசு அனைத்துத் துறைகளிலும் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் மின்வெட்டுப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்குவதில் குளறுபடிகள் நீடிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகச் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதால், இந்த அரசு மீது மக்கள் தற்போதே கடும் அதிருப்தியில் உள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.
த.வெ.க-வில் மாற்றுக்கட்சிப் பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து வருவது குறித்துப் பேசிய ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்தார்.
"தங்கள் கட்சியை வளர்ப்பதற்காக வாரந்தோறும், குறிப்பாகச் சனிக்கிழமை தோறும் பிற கட்சிகளில் இருந்து ஆள் பிடிக்கும் வேலைகளில் த.வெ.க நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய த.வெ.க-வின் தூண்டிலில் நம்முடைய அதிமுக தொண்டர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் விழுந்துவிடக் கூடாது. எத்தனை புதிய சக்திகள் வந்தாலும், தமிழ்நாட்டின் பலமிக்க தொண்டர் இயக்கமான அதிமுக-வை யாராலும் அசைக்க முடியாது" என்று அவர் மிகவும் உறுதியாகப் பேசினார்.
