"அதிமுகவை வேறு யாரிடமாவது கொடுத்துவிடலாம்" – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்!

 
நிர்மல்குமார்

"அதிமுகவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஜானகி ராமச்சந்திரன் ஒப்படைத்ததைப் போல, எடப்பாடி பழனிசாமியும் அந்தத் தலைமைப் பொறுப்பை தகுதியான வேறு யாரிடமாவது கொடுத்துவிட வேண்டும்" என்று தவெக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் இயக்கமான அதிமுகவை, தற்பொழுது மூட்டை கட்டிவிட்டுச் சேலத்தில் கொண்டு போய் அமர வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியும், அவரது மகனும் தங்களது சொந்த சுயநலத்திற்காக மட்டுமே கட்சியையும், அதன் அதிகாரத்தையும் பயன்படுத்தத் தொடங்கியபோதே அந்த இயக்கத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது."

மேலும், தொடர்ந்து அதிமுக சந்தித்து வரும் அரசியல் சறுக்கல்களுக்குப் பழனிசாமியின் தவறான தலைமைத்துவமே காரணம் என்று குற்றம் சாட்டிய அமைச்சர் நிர்மல்குமார், "தனது தவறான அரசியல் நகர்வுகளால்தான் அதிமுக இன்றைக்கு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி சுயபரிசோதனை செய்து உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் மீதும் தவெக அமைச்சர்கள் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரின் இந்த அதிரடிப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.