"அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் - அதிமுக வேட்பாளர் பிரபு வழக்கு!
அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக அரசின் அமைச்சரான கே. ஏ. செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பிரபு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அமைச்சர் செங்கோட்டையனின் வேட்புமனுவில் சட்ட விதிமுறை மீறல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது மனுவில், "அமைச்சர் செங்கோட்டையன் தனது தேர்தல் வேட்புமனுவில் முறைப்படி சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம், அவர் சான்றொப்பமிட்ட தேதியன்றே ஏற்கனவே காலாவதியாகி விட்டது. உரிமம் இல்லாத ஒரு வழக்கறிஞர் சான்றளித்த வேட்புமனு சட்டப்படி செல்லாத ஒன்றாகும்.

இத்தகைய தவறான ஆவணங்கள் கொண்ட ஒரு வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலனையின் போது ஏற்றுக்கொண்டதே சட்டப்படி முற்றிலும் முறையற்ற செயலாகும்."
நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியானதை முறையாகக் கவனிக்காமல் தேர்தல் அதிகாரி வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதால், அதன் அடிப்படையில் பெற்ற இந்த ஒட்டுமொத்த வெற்றியும் சட்டத்திற்குப் புறம்பானது என மனுதாரர் பிரபு குறிப்பிட்டுள்ளார். எனவே, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் பெற்ற வெற்றியைச் செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ளார்.

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே, முதலமைச்சர் விஜய்யின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதி வெற்றியையும் எதிர்த்து எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து நீதிமன்றப் படியேறி வருவது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
