ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்!
தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, அதே சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சியை மீட்டெடுக்கப் போவதாக பல்வேறு சட்டப் போராட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் ஓபிஎஸ் மேற்கொண்டு வந்தார். எனினும், அந்த முயற்சிகள் கைகூடாத நிலையில், இன்று ஒரு அதிரடி முடிவை அவர் அறிவித்தார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை முன்னிட்டு அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் இருவேறு தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்: ஆதரவாளர்கள் மகிழ்ச்சி: ஓபிஎஸ் ஆதரவாளர்களும் திமுகவினரும் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மறுபுறம், அதிமுக பெரியகுளம் நகரச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் அக்கட்சியினர் வெடி வெடித்துக் கொண்டாடினர்.
பொதுவாக ஒரு முக்கியத் தலைவர் மாற்றுக்கட்சிக்குச் செல்லும்போது அக்கட்சியினர் வருத்தப்படுவார்கள். ஆனால், இங்கே அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 'நூறாண்டு காலம் அதிமுக நிலைத்து நிற்கும்' என்ற கனவிற்கு முட்டுக்கட்டையாக ஓபிஎஸ் இருந்து வந்தார். ஒற்றைத் தலைமைக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடுத்து கட்சிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். அவர் இப்போது விலகியது கட்சிக்கு நல்லது."

தற்போது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மாற்றம் தென் மாவட்ட அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருபுறம் திமுக தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலையில், மறுபுறம் அதிமுக 'தேவையற்ற தடைகள் நீங்கிவிட்டதாக' உற்சாகத்தில் உள்ளது.
