போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள்.. கைது செய்யப்பட்ட 2 அதிமுக எம்.எல்.ஏக்கள்..!!

 
அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது
 உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக கவுன்சிலர்களை பார்க்க சென்ற அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் கடந்த 31ம் தேதி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. அப்போது குப்பைகள் அகற்றுவது தொடர்பாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது 17வது வார்டு திமுக உறுப்பினர் ரவிக்குமார் என்பவர், நாற்காலி ஒன்றை அதிமுக உறுப்பினர்கள் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

அதிமுக உறுப்பினர்கள் மீது நாற்காலி வீசிய திமுக உறுப்பினர் ரவிக்குமார்

இந்த விவகாரத்தில் திமுக உறுப்பினர் ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ-வான பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் அதிமுக எம் எல்ஏ-வான ஏ.கே.செல்வராஜ் ஆகியோர், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

Tamil News Today: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி;  அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இருவர் கைது

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாரின் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்ற எம்எல்ஏக்கள் உட்பட அனைவரையும் போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 அதிமுக கவுன்சிலர்களையும் போலீஸார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

From around the web