மார்ச் 4ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - தேர்தல் வியூகம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

 
எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் மார்ச் 4 அன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான 'எம்.ஜி.ஆர். மாளிகை'யில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முதற்கட்டப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும்.

எடப்பாடி இபிஎஸ்

மதுரையில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து விவாதிக்கப்படலாம். கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி மற்றும் இளைஞர் அணியினரைத் தேர்தல் களத்தில் ஈடுபடுத்துவது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றை முன்வைத்து மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும். மதுரை பொதுக்கூட்டத்தில் "210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என எடப்பாடி பழனிசாமி சூளுரைத்த நிலையில், அதனைச் செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுக்க இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.