"அதிமுகவுக்கு 10 அமைச்சர் பதவிகள்" - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி!

 
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழக அரசியலில் நிலவும் தவெக - அதிமுக இடையேயான ரகசியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. தவெக அமைச்சரவையில் அதிமுக பங்கேற்பது தொடர்பாக நிலவிய குழப்பங்களுக்கு விடை அளிக்கும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏ-க்கள் நீக்கப்பட்டு வரும் அதிரடிச் சூழலில், இவரது இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வீரமணி, தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்து தங்களுக்கு வந்த அதிகாரப்பூர்வ சலுகைகள் குறித்துப் பேசினார்.

எடப்பாடி

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, அதிமுகவிற்குத் தங்களது அமைச்சரவையில் 10 அமைச்சர் பதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தது. "மாநிலத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாமும் அமைச்சரவையில் பங்கெடுத்து அதிகாரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்" என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் விரும்பியதாக அவர் தெரிவித்தார்.

தவெக அரசுடன் கூட்டணி வைப்பது மற்றும் ஆட்சியில் பங்கேற்பது தொடர்பாக நிலவிய உட்கட்சி விவாதங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். ஆரம்பத்தில், தவெக அரசுக்கு நிபந்தனையற்ற முறையில் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தரலாம் என்று ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமியிடம் (இபிஎஸ்) கூறியுள்ளனர்.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த யோசனையையோ அல்லது தவெக அமைச்சரவையில் இணைவதையோ ஏற்கவில்லை. கட்சியின் தனித்தன்மையை இழக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததால் இந்த உடன்பாடு எட்டப்படவில்லை என கே.சி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வரும் வேளையில், கே.சி.வீரமணியின் இந்த வெளிப்படையான பேட்டி கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மற்றும் இபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய அரசியல் எதிர்பார்ப்பாகும்.