“அதிமுக-வுக்கும், பாஜக-வுக்கும் தொடர்பில்லை!” - உதயநிதியின் விமர்சனத்திற்கு முதல்வர் விஜய் பதிலடி!
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களை வைத்து திமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்கு, முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "பாசிச பாஜக என்று பேசிவிட்டு, இப்போது பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவைப் பெற்று தவெக ஆட்சி நடத்துவது முரண்பாடாக இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பாக, அதிமுக-வின் ஒரு தரப்பு ஆதரவை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துப் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், "சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பாஜக-வுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர். இந்த உண்மை அவதூறு பேசும் திமுக-வின் கண்களுக்குத் தெரியாமல் போகலாம்."
"திமுக எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், எங்களது தூய எண்ணத்தையும், இந்த அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்பதையும் தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக-வின் வேலுமணி தரப்பைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் தவெக-விற்கு ஆதரவளித்தனர். தாங்கள் பாஜக கூட்டணியில் இல்லை என்பதை அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்த நிலையில், அதையே தனது பதிலுக்கு வலுசேர்க்க முதல்வர் விஜய் பயன்படுத்தியுள்ளார்.
