அதிகாலையில் அதிர்ச்சி... அதிமுக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
இன்று அதிகாலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேனி எஸ்பி.சிவபிரசாத் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பிச்சைக்கனி. இவர் காந்தி சிலை அருகே உத்தமபாளையம் சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் ஒரே ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென இவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதில் ஒரு குண்டு மட்டும் தீப்பற்றியுள்ளது மற்றவை தீ பற்றாமல் ஆங்காங்கே உடைந்து சிதறி உள்ளது.
சத்தம் கேட்டு காவலாளி மாரியப்பன் கேட்டை திறந்து வெளியே சென்றுப் பார்த்த போது, இருசக்கர வாகனத்தில் இருந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் பிச்சைக்கனி, சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “சின்னமனூர் நகராட்சி அதிமுக கவுன்சிலர் உமாராணி என்பவரது மகன் வெங்கடேசன் தொடர்ந்து தன்னிடம் பிரச்னை செய்து வருகிறார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் வெங்கடேசனும், உமாராணியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த முன்விரோதத்தால் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் நேரில் நடத்திய விசாரணையில், மதுபாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வெடிக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. இதில் இரண்டு பாட்டில்கள் வெடித்த நிலையில் மற்றவை வெறுமனே சுவரில் பட்டு உடைந்துள்ளது.
காவலாளி மாரியப்பனிடம் விசாரித்த போது, “இருசக்கர வாகனத்தில் வந்திருந்தவர்கள் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். அவர்களை விரட்டிப்பிடிப்பதற்குள் வேகமாக சென்று விட்டனர்”என்று தெரிவித்தார்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், அரசியல் பிரச்சனையால் இச்சம்பவம் நடந்ததா? வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் சின்னமனூர் போலீசார் தெரிவித்தனர்.