‘அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் இபிஎஸ் தான்’ - சபாநாயகர் அங்கீகாரம்!

 
சபாநாயகர் சபாநாயகர்

அதிமுகவில் உட்கட்சி மாற்றங்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் அடுத்தடுத்த ராஜினாமாவால் சட்டமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி செயல்படுவதைச் சட்டமன்றச் சபாநாயகர் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாளை தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பு அதிமுக தரப்பிற்கு மிக முக்கியச் சட்டப்பூர்வ அங்கீகாரமாக அமைந்துள்ளது.

சமீபகாலமாக அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் எம்.எல்.ஏ பதவி ராஜினமாக்கள் போன்ற காரணங்களால், சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் அந்தஸ்து மற்றும் பிரதிநிதித்துவத்தில் குழப்பங்கள் நீடித்து வந்தன.

தற்போது சபாநாயகர் அளித்துள்ள இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தின் மூலம், அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளை தொடங்கும் கூட்டத்தொடரில், சட்டமன்றப் பேரவையின் விதிமுறைகளின்படி, எடப்பாடி கே. பழனிசாமி பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கான முழு அதிகாரத்துடனும், உரிய முன்னுரிமையுடனும் அவையை வழிநடத்துவார்.

தமிழக நிதியமைச்சர் என். மரிய வில்சன் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கை, 6 தொகுதிகளின் காலிப் பணியிடங்கள், இலவசச் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட தவெக-வின் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய நிதி நெருக்கடி எனப் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை, நிதிநிலை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பி அச்சுறுத்த இபிஎஸ் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ள சூழலில், சபாநாயகரின் இந்தத் தெளிவான அறிவிப்பு நாளை அவையில் இபிஎஸ்-இன் கரங்களை வலுப்படுத்தியுள்ளது. தவெக மற்றும் அதிமுக இடையே சட்டமன்றத்தில் அரங்கேறப் போகும் முதல் நேரடி விவாதக் களம் என்பதால் நாளை தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.