அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா - சபாநாயகர் உடனடி ஏற்பு!
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சபாநாயகரிடம் நேரில் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தை உடனடியாகப் பரிசீலித்த சபாநாயகர், சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று வரை தான் தவெகவில் இணையப் போவதாக வெளியான செய்திகளை முற்றிலும் மறுத்து, அத்தகைய எண்ணம் ஏதும் இல்லை என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று திடீரெனத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது டெல்டா மாவட்ட மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து விலகும் 5-வது சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் ஆவார். இவர் விராட்டிமலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவிலிருந்து விலகியுள்ள இவர், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாகத் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக நோக்கி நகர்வது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
