அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீர் ரத்து... தவெக ஆதரவு விவகாரத்தில் கருத்து வேறுபாடு!?
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில், தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்க இன்று சென்னையில் நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக-விற்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதே இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்குக் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு தரப்பினர் தவெக-விற்கு ஆதரவு அளிக்கலாம் எனத் தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த உட்கட்சிப் பூசல் காரணமாகக் கட்சித் தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஒருமித்த கருத்தைப் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்துப் பரிசீலித்து வரும் வேளையில், அதிமுக-வின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக-விற்குப் பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் தேவை என விஜய் ஆளுநரிடம் கோரியுள்ளார். அதிமுக-வின் ஆதரவு கிடைக்குமா அல்லது உட்கட்சி மோதலால் தவெக-வின் ஆட்சியமைக்கும் முயற்சிக்குச் சிக்கல் ஏற்படுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
