"ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக சேர்க்கக் கூடாது; ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்" - திருமாவளவன்!
"அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக செயல்படக் கூடாது" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் பெரம்பலூர் விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசுகையில், "அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தால், அவர்களைத் தமிழக வெற்றிக் கழகம் தங்களோடு இணைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி இணைத்துக் கொண்டால் அது கட்சியின் நம்பகத்தன்மையைக் கெடுத்துவிடும்."

"அதிமுகவினர் தவெக-வில் இணைவது, 'பாஜக தான் தவெக-வில் இணைகிறது' என்ற பொருளைத் தரும். அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளைச் சந்திக்கும் என்று நான் முன்பே கணித்துக் கூறியிருந்தேன். தவெக தலைவருக்கும், அதன் பொறுப்பாளர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எந்தச் சூழலிலும் தவெக அரசுக்கான ஆதரவை நாங்கள் திரும்பப் பெற மாட்டோம்; உங்கள் ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். நீங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்போம் என்ற முழு நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்."

சமீபத்தில் பெரம்பலூரில் திமுக - விசிக இடையே ஏற்பட்ட அடிதடி சம்பவம் குறித்துப் பேசிய அவர், "பெரம்பலூரில் நடைபெற்ற இந்த விரும்பத்தகாத நிகழ்வு மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதைக் கேள்விப்பட்டு, அதனைத் தவிர்க்குமாறு நான் முன்பே கூறியிருந்தேன். மாவட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் அதனைத் தவிர்த்துவிட்ட போதிலும், தகவல் அறியாத சிலர் அங்கு கூடியதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இயக்கத் தோழர்கள் இடம் கொடுக்கக் கூடாது."
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் யாரும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தேவையற்ற அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் தொல். திருமாவளவன் இந்தச் சந்திப்பில் கேட்டுக் கொண்டார்.
