சிதறு தேங்காய் போல சில்லு சில்லாய் சிதறும் அதிமுக... சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 2,000 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடிமட்டத் தொண்டர்கள் முதல் முன்னணித் தலைவர்கள் வரை அஇஅதிமுகவில் உள்கட்சிப் பூசலும் மோதல்களும் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரின் தலைமையில் கட்சியின் ஒரு பகுதியினர் அதிருப்தி அணியாகச் செயல்பட்டு வருவதுடன், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்க உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சி.வி.சண்முகத்தை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தும் நோக்கில் கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சட்டரீதியான விஷயங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக இருந்ததன் காரணமாக அவரின் பலவீனம் சண்முகத்திற்கு நன்கு தெரியும் எனக் கூறப்படும் நிலையில், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவர் ஏற்கனவே நீக்கப்பட்டார். இருப்பினும், சண்முகம் தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் கட்சியில் இருந்து நேரடியாக அவரை நீக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக அவரைத் தனிமரமாக்கும் நோக்கத்துடன் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 2000க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்கள் மீது கைவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வன்னியர் சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க தலைமை யார் என்ற விவகாரத்தில் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமிக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் அதிகாரப் போட்டியும், முனுசாமியின் செல்வாக்கின் காரணமாகவே சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது இந்த துறைசார் நீக்க நடவடிக்கைகள் பாய்ந்துள்ளதாகவும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
