அதிமுகவினர் ‘ரூ.10,000 டோக்கன்’ சப்ளை... மதுரை முதல் சென்னை வரை அதிரடி - நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

 
டோக்கன் கூப்பன் டோக்கன் கூப்பன்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு ‘ரூ.10,000’ மதிப்புள்ள டோக்கன்களை விநியோகித்ததாக அதிமுகவினர் மீது பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. குறிப்பாக, அதிமுக சார்பில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதியை முன்வைத்து, அதற்கான டோக்கன்கள் மற்றும் மாதிரி காசோலை புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

திமுக பெண்கள் கூட்டம் கூப்பன்

இந்த டோக்கன்களில் க்யூஆர் கோடு மற்றும் பிரத்யேக வரிசை எண்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், இதனை ஸ்கேன் செய்தால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தெரிவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகின.

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆயிரக்கணக்கான போலி டோக்கன்கள் மற்றும் மாதிரி காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையின் துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தரப்பில் இத்தகைய டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முத்தியால்பேட்டை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

8,000 கூப்பன் இளம்பெண்

வாக்காளர்களுக்குப் பணம் தருவதாக ஆசை காட்டுவது தேர்தல் நடத்தை விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் கூறுகையில், "பணப் பட்டுவாடா மற்றும் டோக்கன் விநியோகத்தைக் கண்காணிக்கப் பறக்கும் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். விதியை மீறுபவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது.

இதேபோல் கோவை உள்ளிட்ட பகுதிகளில் திமுக தரப்பில் ரூ.8,000 மதிப்பிலான 'பரிசு கூப்பன்கள்' விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார்களின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவினர் ரூ.8,000க்கு போலி கூப்பன் கொடுத்து, ஆபாசமாக பேசிய சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.