கட்சிக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய இபிஎஸ் தயார் - அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!
தமிழ்நாட்டில் குதிரைப்பேரத்தில் ஈடுபட்டு வரும் தவெக மீதும், அதற்குத் துணைபோகும் அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளதாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவை மீட்டெடுக்கவும் காப்பாற்றவும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தில் குதிரைப்பேர அரசியல் தொடர்வதாகக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதே இதற்கான சான்று என்றும், வெளிப்படையாகக் குதிரைப்பேரம் குறித்துப் பேசும் அமைச்சர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிமுகவிற்குள் நிலவும் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் சி.வி. சண்முகம் போன்ற முன்னணி தலைவர்களின் கருத்துகள் குறித்துப் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் எப்போது வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றார். அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கும், அதிருப்தியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நேரில் வந்து பொதுச்செயலாளரிடம் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் இபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

கட்சியைச் சூழ்ந்துள்ள சவால்களை எதிர்கொண்டு, அதிமுகவைக் காப்பாற்றத் தேவைப்பட்டால் எத்தகைய தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி பின்வாங்க மாட்டார் என்று தெரிவித்த அவர், உரிய நேரத்தில் தகுந்த ஆலோசனைகளுடன் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
