அதிமுக கொறடா நியமனம் - சபாநாயகருடன் தளவாய் சுந்தரம் சந்திப்பு!
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக-வின் அதிகாரப்பூர்வ கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

தவெக அரசுக்கு ஆதரவளித்த வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்களின் கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார். முன்னதாக எஸ்பி வேலுமணி வகித்து வந்த சட்டமன்றக் கொறடா பதவிக்கு, தற்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிப்பதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த மாற்றத்தை அங்கீகரிக்கக் கோரி, இபிஎஸ் தரப்பு எம்எல்ஏ தளவாய் சுந்தரம் இன்று சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்துப் பேசினார்.
கட்சியின் கொறடா மாற்றப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அவர் சபாநாயகரிடம் வழங்கினார். தவெக அரசுக்கு ஆதரவளித்த 25 எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து சபாநாயகரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே இப்போது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில், அதிமுக-வின் இந்த உட்கட்சி மோதல் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதில் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
