உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - நயினார் நாகேந்திரன்!
"தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தற்போதுள்ள அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக நீடிக்கும்" என்று பாஜகவின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் அடுத்தகட்ட தேர்தல் வியூகங்கள் குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான தற்போதைய பலமான கூட்டணி எவ்வித மாற்றமுமின்றித் தொடரும். இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும், களத்தில் தொண்டர்களை முழு வீச்சில் தயார்படுத்தவும் தேவையான முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் விரைவில் கூட்டப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன."
தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், "வரும் காலங்களில் தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் (தவெக) மற்றும் எங்களது பாஜக கூட்டணிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி இருக்கும். மாற்று அரசியல் சக்தியாக மக்கள் எங்களைத்தான் பார்க்கிறார்கள்" என்று மிகவும் திட்டவட்டமாகக் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், அடுத்ததாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என நயினார் நாகேந்திரன் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
