ஐப்பசி பௌர்ணமி.. திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்!
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தீப மலையைச் சுற்றி கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்தனர்.
ஆன்மீகச் சிறப்புமிக்க திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலை மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவு கிரிவலம் செல்வது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. அதன்படி, ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷத்துடன் கிரிவலம் செல்லத் தொடங்கினர். பக்தர்களின் வசதிக்காகக் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

கிரிவலத்தை நிறைவு செய்த பக்தர்கள், அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசிப்பதற்காகக் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வழிகளில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை நகர் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
