இன்று முதல் மீண்டும் துபாய் - திருச்சி இடையே விமான சேவை தொடக்கம்!

 
ஏர் இந்தியா ஏர் இந்தியா

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான வெளிநாட்டு விமான சேவைகள் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் தங்களது வர்த்தக ரீதியிலான சேவைகளை முழுமையாக ரத்து செய்திருந்தன. இந்த இக்கட்டான சூழலால் துபாய் மற்றும் திருச்சி இடையே பயணிக்க காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

ஏர் இந்தியா

தற்போது போர் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், இன்று முதல் துபாயில் இருந்து திருச்சிக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தொடங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முன்பதிவுகளும் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விமான கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரடி விமான சேவை மீண்டும் கிடைப்பதால் அமீரகத்தில் வாழும் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

ஏர் இந்தியா விமானம்

இன்று மாலை 3.55 மணிக்கு துபாயில் இருந்து புறப்படும் விமானம், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மாலை 2.55 மணிக்கு துபாயைச் சென்றடையும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் இந்த விமான சேவைகள் தடையின்றி தொடர்ந்து இயங்கும் என விமான போக்குவரத்து வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.