சென்னை விமான நிலைய 3-வது முனையத்தில் 10 புதிய நவீன ஓய்வறைகள்... பயணிகள் மகிழ்ச்சி!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குத் தினசரி நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் தங்களின் இணைப்பு விமானங்களுக்காகக் காத்திருக்கும் மாற்றுப் பயணிகளாகச் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அவர்கள் பல நேரங்களில் 12 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போது சென்னை விமான நிலையத்தில் இந்த மாற்றுப் பயணிகளுக்குப் போதுமான தங்கும் வசதிகள் இல்லாததால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். பயணிகளின் இந்த நீண்ட நாள் குறையைப் போக்கும் வகையில், இந்திய விமான நிலைய ஆணையம் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ஓய்வறைகளை அமைக்கத் தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வரும் அதிநவீன 3-வது முனையத்தில், முதல்கட்டமாக 10 புதிய நவீன ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன.

நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான தரம் மற்றும் சகல நவீன வசதிகளுடன் இந்தத் தங்கும் ஓய்வறைகள் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக விமான நிலைய வளாகத்திற்குள் தனியாக நட்சத்திர ஓட்டல் அமைக்கும் திட்டம் பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக தற்போது இந்த புதிய தங்கும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த புதிய ஓய்வறைகளுக்குப் பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, எதிர்காலத்தில் மேலும் கூடுதலான ஓய்வறைகளை அமைக்கவும் விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
