உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

 
congress congress

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவருமான அஜய் ராய்க்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 56 வயதான இவர், லக்னோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது நேற்று மாலை 6 மணியளவில் எதிர்பாராத விதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டவர் அஜய் ராய் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் குழுவினர் முதலுதவி மற்றும் தொடர் சிகிச்சைகளை வழங்கினர். இந்தத் தகவல் பரவியதும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பாகத் திரண்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

அஜய் ராயின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்குத் தேவையான அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதை அறிந்து அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் நிம்மதியடைந்துள்ளனர்.