50 மணி நேரம் பனியில் தனியாகப் போராடிய நாய்… உயிருடன் மீட்பு... நெகிழ்ச்சி வீடியோ!

 
நாய்

 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய நாய், சுமார் 50 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. லூலூ என்ற அந்த நாயின் உயிர் போராட்டம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

அலாஸ்காவில் உள்ள சுகாச் மாநிலப் பூங்காவின் பெப்பர் பீக் மலைப்பகுதியில், பிரையன் மற்றும் லாரன் படாவர் ஆகியோர் தங்களது 4 வயது செல்ல நாய் லூலூவுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் இருவரும் சுமார் 500 அடி தூரம் அடித்துச் செல்லப்பட்டு காயமடைந்தனர். அவர்கள் உயிர் தப்பிய நிலையில், லூலூ பனிப்பகுதியில் தனியாகச் சிக்கிக்கொண்டது.

உறைபனியிலும் உணவு, பாதுகாப்பு இன்றியும் சுமார் 50 மணி நேரம் தவித்த நாயைத் தேடுவதற்கு, அதன் கழுத்துப்பட்டையில் இருந்த ஆப்பிள் ஏர்டேக் கருவி உதவியது. அதன் சிக்னலைக் கொண்டு மீட்புக் குழுவினர் லூலூவைக் கண்டுபிடித்தனர். கால்களில் உள்ள விரல்கள் மற்றும் பற்களில் சிறிய காயங்கள் இருந்தபோதிலும், நாய் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.