உஷார்... போலி டிகிரி சர்டிபிகேட், வங்கி செக் புக் தயாரித்த 6 பேர் கைது - சென்னையில் அதிர்ச்சி!

 
காசோலை மோசடி

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலி வங்கி காசோலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஆவணங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் போலி கல்விச் சான்றிதழ்களை அச்சிட்டு விநியோகம் செய்து வந்த குற்ற கும்பலைச் சேர்ந்த 6 பேரைத் தனிப்படை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கணினிகள், ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் போலி ஆவணங்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எண்ணூர் அடுத்த எர்ணாவூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போலியான வங்கி காசோலைகள், போலியான அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி கல்விச் சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில், குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் நேற்று எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எர்ணாவூர், விம்கோ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

விசாரணையில் அவர் எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற ஸ்டீபன் (38) என்பது தெரிய வந்தது. அவரது பையைச் சோதனை செய்த போது, போலியாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு வங்கி காசோலைகள், அரசு, தனியார் அலுவலகங்களின் பெயரிலான போலி ரப்பர் ஸ்டாம்புகள், போலி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அவற்றை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சிறப்புப் பேப்பர்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜெயக்குமாரை எண்ணூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் எர்ணாவூரில் ஒரு இடத்தைக் வாடகைக்கு எடுத்து, அங்கு போலிப் பத்திரங்கள் மற்றும் ரப்பர் ஸ்டாம்புகளைப் பயன்படுத்திப் பல்வேறு வங்கிகளின் போலி காசோலைகள், முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்தச் சட்டவிரோத மோசடியில் அவருக்குக் கூட்டாளிகளாகச் செயல்பட்டு வந்த கருணாகரன், சத்தியமூர்த்தி, கருணாநிதி, விக்டர் மற்றும் ஜான்சன் ஆகியோரையும் காவல்துறையினர் உடனடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்த 6 பேரிடமிருந்தும் போலி சான்றிதழ்கள், லேப்டாப் (Laptop), கலர் பிரிண்டர்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.