உஷார்... காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது... வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு அரபிக் கடலில் நிலவிய மேலடுக்குச் சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி, நகரின் பல்வேறு பகுதிகளில் மேகவெடிப்புக்கு இணையான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. 

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

பாரிமுனையில் அதிகபட்சமாக 36.34 செ.மீ மழையும், கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ மற்றும் எண்ணூரில் 21.58 செ.மீ அளவிலும் மழை பதிவாகியுள்ளது.

கத்திவாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ அளவிற்கும், மீனம்பாக்கம் மற்றும் சாத்தங்காடு ஆகிய இடங்களில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும் மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கம் காரணமாகச் சென்னைக்கு இன்றும் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தொடர்வது குறிப்பிடத்தக்கது.